IPL 2025 retentions: 'பும்ராவுக்கு அதிக தொகை' - மும்பை தக்கவைக்கும் வீரர்கள் யார் யார்?
Vikatan November 01, 2024 01:48 AM
ஐ.பி.எல் ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா, சூர்யக்குமார் யாதவ், ஹர்திக், ரோஹித், திலக் வர்மா ஆகியோரைத் தக்கவைத்திருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வித்தியாசமாக விளையாண்டிருக்கிறது.
MI

பும்ராவை முதல் வாய்ப்பாக தக்கவைத்து இருப்பதிலேயே அதிகமாக ரூ.18 கோடி ரூபாயை அவருக்கு வழங்கியிருக்கிறார். சூர்யாகுமார் யாதவ்வுக்கும் ஹர்திக்குக்கும் தலா 16.35 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார்கள். ரோஹித்துக்கு 16.30 கோடி ரூபாயும் திலக் வர்மாவுக்கு 8 கோடி ரூபாயும் வழங்கி தக்கவைத்திருக்கிறார்கள்.

மும்பை அணியில் நிறைய ஸ்டார் வீரர்கள் இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சரியான தொகையைக் கொடுத்து தக்கவைப்பது சிரமமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ரோஹித் - ஹர்திக் இருவரையும் அசௌகரியப்படுத்தாமல் இந்த ரிட்டன்ஷன் நிகழ வேண்டும் என்ற நிலையும் இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் மும்பை அணி இப்போது தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது.

தற்போதைக்கு உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் பும்ராதான். இந்திய அணியே பும்ராவை நம்பிதான் இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கான பங்களிப்பைக் கொடுக்கிறார். இந்திய அணி உலகக்கோப்பையையும் வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான். அதனால் அவருக்கு சரியான கௌரவத்தை அளிக்கும் வகையில் பும்ராவுக்கு ரூ. 18 கோடியை வழங்கியிருக்கிறார்கள். மேலும், ரோஹித் அல்லது ஹர்திக்குக்கு அதிக தொகையைக் கொடுத்திருந்தால் அவர்கள் இருவருக்குமான உறவில் அசௌகர்யம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வெளியிலும் அது தேவையில்லாத பேச்சுகளை உருவாக்கும். அதனால்தான் பொதுவாக பும்ராவுக்கு அதிக தொகையை கொடுத்துவிட்டார்கள். சூர்யாவுக்கும் ஹர்திக்குக்கும் 16.35 கோடி ரூபாய். ரோஹித்துக்கு 16.30 கோடி ரூபாய். மூவருக்கும் பெரிய வித்தியாசமில்லை.

Mumbai indians

மொத்தமாக 75 கோடி ரூபாயைத்தான் செலவளிக்க முடியும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் கணக்கிட்டு ரோஹித்துக்கு 5 லட்ச ரூபாயை குறைவாக வழங்கியிருக்கிறார்கள். திலக் வர்மா மும்பையின் பிராடக்ட். அவருக்கும் 8 கோடி ரூபாயைக் கொடுத்து தக்க வைத்திருக்கிறார்கள்.

'நான்கு சீனியர் வீரர்களிடமும் பேசி அணியின் நலனை விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தோம். பும்ராவின் திறனை மதித்து கௌரவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு அவ்வளவு தொகை.' என மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசியிருக்கிறார்.

மும்பை அணி தக்க வைத்திருக்கும் வீரர்கள் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.