மலையாள சினிமாவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் தனது நீண்ட நாள் காதலியான உத்ரா கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு மலையாள திரையுலகினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மலையாளத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஷ்மத்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சுஷின் ஷ்யாம். தொடர்ந்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’, ‘அஞ்சாம் பதிரா’, ’ட்ரான்ஸ்’, ‘மாலிக்’, ‘மின்னல் முரளி’, ‘பீஷ்ம பருவம்’, ‘ரோமாஞ்சம்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ என ஹிட் படங்களுக்கு இசையமைத்த இவரின் பாடல்களும் ஹிட்டடித்தன. குறிப்பாக அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்கும் சுஷின் ஷ்யாம் தான் இசையமைத்தார். கடைசியாக ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘போகைன்வில்லா’ படத்துக்கு இசையமைத்தார். அதன் பிறகு சிறிது காலத்துக்கு இசையமைப்பதிலிருந்து விலகி இருக்கப் போகிறேன் என அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் சுஷின் ஷ்யாம் தனது நீண்ட நாள் காதலியான உத்ரா கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தில் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா, பார்வதி, ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். உத்ரா கிருஷ்ணனை பொறுத்தவரை அவர் நடிகை பார்வதி ஜெயராமின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.