ஐ.பி.எல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. ஆம், தோனி ஓய்வை அறிவிப்பாரா தன்னுடைய கரியரை நீட்டிப்பாரா எனும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. சென்னை அணி தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ரசிகர்களின் விருப்பப்படி தோனி சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டிருக்கிறார். ருத்துராஜ் கெய்க்வாட், ஜடேஜா, துபே, பதிரனா, தோனி என சென்னை அணி தக்க வைத்திருக்கும் வீரர்களைப் பற்றிய ஒரு அலசல் இங்கே.தோனி - Dhoni
ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜாவுக்கு தலா 18 கோடியை கொடுத்து தக்க வைத்திருக்கிறார்கள். பதிரனாவுக்கு 13 கோடியையும் துபேவுக்கு 12 கோடியையும் வழங்கியிருக்கிறார்கள். தோனியை அன்கேப் வீரராக 4 கோடிக்கு தக்க வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் 65 கோடி ரூபாயை சென்னை அணி ஏலத்துக்கு முன்பாக செலவளித்திருக்கிறது.
ருத்துராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டன். அவரை தக்கவைத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 2023 சீசனிலிருந்தே அவரைத்தான் தங்கள் அணியின் வருங்காலமாக பாவித்து சென்னை அணி உருவாக்கி வளர்த்தெடுத்தது. கேப்டன்சி என்பதைத் தாண்டி பேட்டிங்கிலும் சென்னை அணியின் ஆகப்பெரும் நம்பிக்கையாக ருத்துராஜ் விளங்குகிறார். கண்டிப்பாக ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் எப்போதும் இருக்கிறார். சென்னை அணியின் பெரும்பாலான ரன்களை அவர்தான் அடித்துக் கொடுத்திருக்கிறார். ருத்துராஜை கடந்த சுழற்சியிலேயே சென்னை அணி ஏலத்தில் விடாமல் தக்கவைக்கத்தான் செய்தது. அவர் கேப்டனாக இல்லாவிடிலுமே சந்தேகமே இல்லாமல் அவரை தக்க வைத்திருப்பார்கள்.
இரண்டாவதாக ஜடேஜாவை தக்க வைத்திருக்கிறார்கள். இந்த தேர்வுக்குதான் இரண்டு விதமான கருத்துகள் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜடேஜா மேட்ச் வின்னர், சென்னை அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். மதிப்புமிக்க ஆல்ரவுண்டர், இதனால் அவரை தேர்வு செய்ததில் எந்தத் தவறும் இல்லை என ஒரு தரப்பு பேசிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஜடேஜாவின் தற்போதைய ஃபார்முக்கு அவரை இத்தனை கோடி கொடுத்து தக்க வைக்காமல் ஏலத்துக்கு சென்று RTM கார்டு மூலம் குறைந்த தொகைக்கு எடுத்திருக்கலாம் என்றும் இன்னொரு தரப்பு பேசிக்கொண்டிருக்கிறது. இரண்டு பக்கமும் நியாயம் இருப்பதை மறுக்க முடியாது. ஜடேஜாவிடம் ஒரு கன்ஸிஸ்டன்சி இருக்காது. ஆனாலும் இன்னும் அவரால் அசாத்தியங்களை நிகழ்த்த முடியும். ஒரு நல்ல ஆல்ரவுண்டராக சில போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவர் அணியில் இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக அவருக்குக் கொடுக்கப்படிருக்கும் தொகைதான் இங்கே விவாதமாகியிருக்கிறது.
சிவம் துபே, பதிரனா இருவரையுமே தக்க வைத்திருக்கிறார்கள். சிவம் துபே சென்னை அணியின் தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டார். மிடில் ஓவர்களில் அவர் இல்லாமல் சென்னை அணியால் திறம்பட ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவர் மிடில் ஓவர்களில் பேட்டை வீசாத போட்டிகளில் சென்னை அணி கடுமையாக சொதப்பியிருந்தது. சென்னை அணியின் சக்சஸ் ஃபார்முலாவின் முக்கிய அங்கம் என்பதால் அவரை தக்க வைத்ததிலும் ஆச்சர்யமில்லை.
ருத்துராஜ் கெய்க்வாட்டை எப்படி வருங்காலத்துக்கான ஆப்சனாக பார்த்தார்களோ அப்படித்தான் பதிரனாவையுன் வருங்காலத்துக்கான ஆப்சனாக பார்க்கிறார்கள். சர்வதேசப் போட்டிகளை விட இந்திய மைதானங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் நன்றாக ஆடுகிறார். பாதத்தை துளைக்கும் அவரின் துல்லியமான யார்க்கர்களுக்கு எப்பேற்பட்ட பேட்டரும் திணறவே செய்கிறார்கள். கடந்த முறை அவரை சென்னை அணி அடிப்படை விலைக்குதான் வாங்கியிருந்தது. தக்கவைக்க அதிக தொகையை கொடுக்க வேண்டும் என்பதால் பதிரனாவை ஏலத்துக்குச் சென்று RTM கார்டு மூலம் சென்னை எடுக்க நினைக்கும் என்ற கணிப்புகளும் இருந்தது. ஆனால், சென்னை அணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மேலும், ஏலத்திற்கு முன்பாகவே முதல் வாய்ப்பாக ஒரு வீரர் தக்க வைக்கப்படும் போது அது கொடுக்கும் நம்பிக்கை பெரிதாக இருக்கும். அந்த விதத்திலும் பதிரனாவின் தேர்வு நியாயமானதுதான்.
Matheesha Pathiranaஇடையில் நீக்கப்பட்டு தோனிக்காகவே மீண்டும் புதிதாக சேர்க்கப்பட்ட 'Uncapped' வீரர் விதிமுறையின் படி தோனி தக்கவைக்கப்பட்டிருக்கிறார். தோனி பெரும் ரசிகர் பட்டாளத்தை ஐ.பி.எல் க்குள் இழுத்து வருகிறார். அவரால் மைதானங்கள் நிரம்புகின்றன. அவருக்காக தொலைக்காட்சி முன் அமர்ந்து போட்டிகளை பார்க்கிறார்கள். அவர் ஒரு வணிக முகம். ஒரு வீரராக அவர் சென்னை அணிக்கு தேவைப்படுவதை விட ஒரு சூப்பர் ஸ்டாராக அவர் ஐ.பி.எல் க்கு தேவைப்படுகிறார். தோனியின் தேர்வில் நியாய அநியாயம் பேசவெல்லாம் இடமே இல்லை. முழுக்க முழுக்க அவர் வணிகத்துக்காக மட்டுமே தக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை அணியின் தேர்வுகளைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.