தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா. இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த படம் கங்குவா. 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கங்குவா இன்று உலகெங்கும் ரிலீசாகியுள்ளது. உலகெங்கும் மொத்தம் 14 ஆயிரம் திரையரங்கில் படம் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் திரையரங்கில் மிகுந்த உற்சாகத்துடன் கங்குவா படத்தைப் பார்ப்பதற்கு குவிந்து வருகின்றனர். கங்குவா படம் முதலில் தீபாவளி விரு்தாக வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியான காரணத்தால் கங்குவா படம் வெளியாவதில் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்காக படக்குழு கடந்த சில வாரங்களாகவே தீவிர ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். கங்குவா படம் இன்று வெளியாக இருந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு கடன் தொகையை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அடுத்தடுத்து தொடர் சிக்கல்கள் உருவாகி வந்த நிலையில், நேற்று தயாரிப்பு நிறுவனமான ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.
சூர்யா ரசிகர்கள் உற்சாகம்:
கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் திரையரங்கில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியான பிறகு, சுமார் இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்கில் குவிந்தனர்.
கங்குவா படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. கங்குவா படம் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியாவின் மற்ற திரையுலகங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை, வீரம். வேதாளம். விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சூர்யா பிரான்ஸிஸ் – கங்குவா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கங்குவா கதாபாத்திரமே படத்தில் பிரதான காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. கார்த்தி படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள கங்குவா படம் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்துடன் முடிவடைகிறது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசுகள் வெடித்து கங்குவா வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர்.