இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்திய அணியில் விளையாட கிடைத்த குறைவான வாய்ப்புகளில் சொதப்பினாலும் அதைச் சரிசெய்யும் விதமாக ஒரு சில நல்ல இன்னிங்ஸையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சஞ்சு சாம்சன்இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளில் ஜொலிக்கத் தவறுகிறார் என்று ஒருபக்கம் சஞ்சு சாம்சன் மீது விமர்சனமும், மறுபக்கம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்காமல் புறக்கணிக்கிறார்கள் என்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு டி20 போட்டிகளில் இரண்டு சதமடித்திருக்கிறார் . மற்ற இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி, தன் மீதான இரு வேறு கருத்துகளும் சரியானது தான் என்பது போல் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சாம்சன்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், இந்திய அணியின் நான்கு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, தன்னுடைய மகனின் கரியரில் 10 ஆண்டுகளைச் சீரழித்ததே இவர்கள்தான் எனப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
மலையாள ஊடகத்துடன் பேசுகையில் இதனைத் தெரிவித்த சாம்சன் விஸ்வநாத், ``என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையைச் சீரழித்த மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். அவர்கள், தோனி, கோலி, ரோஹித். இவர்களுடன் பயிற்சியாளர் டிராவிட்.
இந்த நான்கு பேரும் எனது மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர். ஆனாலும், அந்த நெருக்கடியிலிருந்து சஞ்சு வலுவாக வெளிவந்தார். இப்போது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கம்பீருக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், கடந்த காலத்தைப் போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்." என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...