இன்று நவம்பர் 14ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இது போன்ற ஒரு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று தான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் நீங்கப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட விரும்பிய மணவாழ்க்கை, புத்திர பாக்கியம், ஆரோக்கியம் , தீர்க்க சுமங்கலி வரம் என அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். குறிப்பாக ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் சிவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும்.
அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். உண்ண உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதத்தில் இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செய்யப்படும் அன்னாபிஷேகத்தை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் குவிவார்கள்.
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரியச் செய்யப்படுகிறது. தீயில் நீரும், நீரில் நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனையே சேர்கிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்தவே சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.