தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடந்த 12ஆம் தேதி நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த பகுதி வலுவிழந்த நிலையில், தற்போது வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் குறிப்பாக சென்னைக்கு அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதோடு நவம்பர் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.