இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்காவின் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று இலங்கை அரசியலை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி கட்சி.
சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அக்கூட்டணிக்கு தலைமை வகித்த அனுர குமார திசாநாயக்கா அதிபரானார். பல ஆண்டுகளாக, செல்வாக்கு மிக்க கட்சிகளாக திகழ்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 69 லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில், "இலங்கைக்கு ஒரு வரலாற்று தருணம். தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
இந்தத் தருணம் தேர்தல் முடிவுகள் மட்டும் குறிக்கவில்லை. இது நம் தேசத்தின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த சின்னத்தை குறிப்பிடுகிறது. தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
மேலும் இந்த மாற்றம் மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
61.56 சதவிகித வாக்குகளுடன் இரண்டில் மூன்று பங்கு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் கட்சியாகும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் பாரம்பரிய அரசியல் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் தேர்தலை போன்று, நாடாளுமன்ற தேர்தலிலும் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியை சந்தித்துள்ளது.