Kanguva: "தியேட்டர் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லியிருக்கிறோம்" - ஞானவேல்ராஜா விளக்கம்
Vikatan November 15, 2024 10:48 PM
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் `கங்குவா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

சூர்யா ப்ரீயட் போர்ஷன்களில் கங்குவாவாகவும், நிகழ்கால காட்சிகளில் ஃபிரான்சிஸாகவும் நடித்திருக்கிறார். முன்பே படத்திற்கு இரண்டாம் பாகம் வருமென அறிவித்த படக்குழு, திரைப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு ஒரு கேமியோ கதாபாத்திரத்தை வைத்து லீட் கொடுத்திருக்கிறார்கள். `கங்குவா 2' தொடர்பாகவும் படத்திற்குக் கிடைத்திருக்கும் விமர்சனங்கள் தொடர்பாகவும் தெலுங்கு மீடியாகளிடம் கூகிள் மீட் வழியாக உரையாற்றியிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

அவர், "இந்தப் படத்திற்குப் பிறகு சிவா சார் அஜித் சாரின் படத்தை உடனடியாக இயக்கவிருக்கிறார். அதன் பிறகு `கங்குவா 2'-வுக்கான வேலைகளைத் தொடங்குவார். இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாக உருவாகவிருக்கிறது. படத்தின் ஒலி அதீதமாக இருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தைத் தொடர்ந்து நாங்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் படத்தின் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லியிருக்கிறோம். அது இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தின் தவறு அல்ல. அது ஒலிக்கலவைத் தொடர்பான பிரச்னைகள். இன்றைய நைட் ஷோவிற்குள் அந்த பிரச்னையையும் சரி செய்து விடுவோம்.

Gnanavel Raja

இதைத் தாண்டி படத்தின் முதல் இருபது நிமிடங்கள் தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இதனைத் தவிர வேறு எந்த விமர்சனமும் மக்களிடமிருந்து வரவில்லை. சூர்யாவின் முந்தைய திரைப்படங்கள் முழு வசூலை `கங்குவா' திரைப்படம் இரண்டு, மூன்று நாட்களில் தாண்டிவிடும். படத்தின் கமர்ஷியல் பெர்ஃபாமென்ஸை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். `கங்குவா' பண்டிகை நாட்களில் வெளியாகவில்லை. அதனால் எதிர்பார்த்ததைப்போல ஓப்பனிங் நம்பர் பெரிதாக இருக்காது. ஆனால் வார இறுதிநாட்களில் படத்தின் வசூல் அதிகமாகும் என்பதை உறுதியாகச் சொல்வேன்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.