Viduthalai : வெற்றிமாறனின் 'விடுதலை 2' - அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சர்ய அப்டேட்கள்!
Vikatan November 16, 2024 11:48 PM

வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி கூட்டணியின் 'விடுதலை' வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருவதால், படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன. நாளை (17ம் தேதி ) 'தினம் தினமும்' என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

விஜய்சேதுபதி

காமெடியில் திணறிக்கொண்டிருந்த சூரியை கதைநாயகானக உயர்த்தியவர் வெற்றிமாறன். 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகும் முன்னரே இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி 'விடுதலை 2' படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் கதை நாயகனாக சூரி, குருவாக விஜய் சேதுபதி தவிர, படத்தில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல் மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் என பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கின்றனர்.

படப்பிடிப்பில்..

முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்கள் பலவும் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டின. படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருந்தது. அதைப் போல, இரண்டாம் பாகமும் வலுவான ஒரு விஷயத்தை முன்நிறுத்துகிறது என்கிறார்கள். ரிலீஸுக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால், படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து, இதர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகத்தில் அவரது இசையில், குரலில் வெளியான 'காட்டுமல்லி' பாடலை போல, இதிலும் ஒரு பாடல் வரவிருக்கிறது. இந்த 'தினம் தினமும்' பாடலை இசைஞானியே எழுதி, பாடியிருக்கிறார். அவருடன் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளார். விஜய் சேதுபதி, மஞ்சுவாரியருக்குமான காதல் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்ப்பும் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு விட்டதால், படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். டீசர் மற்றும் இதர பாடல்கள் இம்மாதம் 26ம் தேதி இசை வெளியீட்டு விழாவில் வெளியிடுகின்றனர். படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதி- மஞ்சுவாரியரின் டீ ஏஜிங் தொழில்நுட்ப காட்சிகளும் நிறைவடைந்துவிட்டன. இதர போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் தீவிரமாக பரபரக்கின்றன என்கிறார்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.