22 வயதில் எந்த இந்திய வீரராலும் நெருங்க முடியாத உயரம்.. ஒரே தொடரில் தடம்பதித்து சரித்திரம் எழுதிய திலக் வர்மா..
Tamil Minutes November 17, 2024 01:48 AM

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர்களை எதிர்த்து டி20 தொடரை வென்றுள்ளது தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவிலும் இலங்கை, ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களை வென்றிருந்தது. ஆனால் அதைத் தாண்டி சேனா நாடுகளில் அதிகம் ஆடியதில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்து வந்த நிலையில் அதனையும் தற்போது சூர்யகுமார் கேப்டன்சியில் அடித்து நொறுக்கி தொடரை சொந்தமாக்கி உள்ளது.

திலக் வர்மாவின் விஸ்வரூபம்

ஒவ்வொரு தொடரிலும் ஒரு புது வீரர்கள் பெரிய அளவில் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா பேட்டிங் அபாரமாக அமைந்திருந்தது. முதல் மற்றும் கடைசி போட்டியில் சதமடித்து சாதனை புரிந்திருந்தார் சஞ்சு சாம்சன். இதே போல கடைசி இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதமடித்து அசத்தி இருந்தார் இளம் வீரர் திலக் வர்மா.

இளம் வீரர்கள் அதிகம் பேர் பட்டையை கிளப்பி வருவதால் இனி எந்த நாடாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கை பொருத்தவரையில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடி ஆட்டத்தை மட்டும் தான் கையில் எடுத்து ஆடி வருகிறது.

முடிந்த அளவுக்கு டி20 போட்டிகளில் சுயநலமாக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும் என எண்ணாமல் அணி வெல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆடி வருவதாகவும் சூர்யகுமார் பலமுறை நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதை இந்திய அணியில் பேட்டிங் ஆடும் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செய்து வரும் நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

மேலும் நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் திலக் வர்மா 280 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக ஒரு டி20 தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பை கோலியை முந்தி தற்பொழுது திலக் வர்மா சொந்தமாக்கி உள்ளார். இவருக்கு தற்போது 22 வயதே ஆகும் நிலையில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத முக்கியமான ஒரு சாதனையை இந்த தொடரில் செய்து காட்டியுள்ளார்.

22 வயதில் அபார சாதனை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இரண்டு முறை சதமடித்திருந்தார் திலக் வர்மா. மேலும் இரண்டு முறை ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தொடர் நாயகன் விருதினையும் சொந்தமாக்கி இருந்தார். இதன் காரணமாக, 22 வயதிற்குள் ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சதமடித்த வீரர் என அனைத்தையும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் திலக் வர்மா பெற்றுள்ளார்.

நிச்சயம் இனிவரும் நாட்களில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பேட்டிங் வரிசையில் திலக் வர்மா இருப்பார் என கருதப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.