"கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்" இளைஞர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அட்வைஸ்!
சுதர்சன் November 17, 2024 12:14 AM

பழங்குடியின சமூகம் நாட்டின் பெருமை என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். பழங்குடியின கலாச்சாரம் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மதிக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

"நான் எங்கு சென்றாலும், பழங்குடியின வாழ்க்கை முறை, அவர்களின் கலாச்சாரம், அவர்களின் இசை, அவர்களின் பண்புகள், அவர்களின் திறமை ஆகியவை என்னை மயக்குகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டன வீரரான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு உதய்பூரில் உள்ள கோத்ராவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், கலாச்சார ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பழங்குடி சமூகங்களின் நம்பிக்கைகளை கவர்ந்திழுக்கவும் மாற்றவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. இது ஒரு தீங்கிழைக்கும் முயற்சியாக நான் கருதுகிறேன். மென்மையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலமும், நலம் விரும்பிகளாக காட்டிக் கொள்வதன் மூலமும், நம்மை ஆசை காட்டுவதன் மூலமும், நம்மை கவர்ந்திழுப்பதன் மூலமும், நமது நம்பிக்கையை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நமது கலாச்சார பாரம்பரியம் நமது அடித்தளம். அஸ்திவாரம் அசைந்தால், எந்தக் கட்டிடமும் பாதுகாப்பாக இராது. நாட்டில் திட்டமிட்ட மற்றும் சதித்திட்டம் தீட்டப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு செயல்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

பிர்சா முண்டாவின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், "நாட்டின் சுதந்திரத்திற்காக, பழங்குடியினருக்காக, மண்ணுக்காக கற்பனை செய்து பார்க்க முடியாததை பகவான் பிர்சா முண்டா செய்தார். அவரது  நீர், காடு, நிலம் - இவை வெறும் வார்த்தைகள் அல்ல, அவை ஒரு வாழ்க்கை முறை.

இந்தப் போதனைகள் நிலையான வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று அவர் வலியுறுத்தினார். தேவைக்கு மேல் ஒரு தானியத்தைக் கூட எடுத்துச் செல்லாத சமூகம் பழங்குடி சமூகம்.

சுற்றுச்சூழல் என்றால் என்ன, பூர்வீக வாழ்க்கை என்றால் என்ன, குடும்பம் என்றால் என்ன, ஒரு நபரின் கடமை என்ன என்பதை பழங்குடி மக்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

"குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவின் பதவி பழங்குடியினரின் பெருமையின் அடையாளம்" என்று திரு தன்கர் மேலும் கூறினார். இந்திய ஜனநாயகத்தின் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.

இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், "கல்வியில் கவனம் செலுத்துமாறு நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன் எல்லை இல்லை. இன்று, இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் சரியான நபர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.