Health: இரத்தப்போக்கு கண் வைரஸ்...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
Vikatan December 03, 2024 09:48 PM

மார்பர்க் வைரஸ் (marburg) அல்லது 'ரத்தப்போக்கு கண் வைரஸ்' என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ் ஒன்று, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு கொடிய 'மார்பர்க் நோய்' பற்றி எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

உலகின் 17 நாடுகளில் மார்பர்க், mpox, oropouche போன்ற வைரஸ்கள் பரவி வருவதால் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிகுறிகளில் ஒன்றான 'இரத்தப்போக்கு கண்கள்' என அழைக்கப்படும் மார்பர்க் வைரஸ், ஆப்பிரிக்காவில் இருக்கிற ருவாண்டாவில் இதுவரை 15 பேரைக் கொன்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான பேருக்கு இந்தத் தொற்று நோய் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு வாய்ப்பு 50 சதவிகிதம் என்பதால், இந்த வைரஸ் கொடிய வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Marburg

மார்பர்க் அல்லது ரத்தப்போக்கு கண் வைரஸ் 'எபோலா' குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும். இதனால், ரத்த நாளங்களில் சேதம் ஏற்பட்டு மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட வழிவகுக்கிறது. மார்பர்க் வைரஸ் பழ வௌவால்களிடமிருந்து உருவானதாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் ரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் வழியாக மனிதர்களிடையே பரவுகிறது.

இரத்தப்போக்கு கண் வைரஸின் அறிகுறிகள் எபோலா வைரஸின் அறிகுறிகளுடன் ஒத்திருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப்புண், சொறிசிரங்கு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எதிர்பாராத எடை இழப்பு, மூக்கு, கண்கள், வாய் அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்படலாம். கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு ஏற்படும்பட்சத்தில் அவை மரணத்திற்கு வழிவகுக்கும்.

WHO

மார்பர்க் வைரஸுக்கு என குறிப்பிட்ட தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளுக்கான மருத்துவ சிகிச்சையே நிலைமையை நிர்வகிக்க உதவும். இதற்கான தடுப்பூசி ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், தற்போது நோய் எதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் போன்றவையே உதவிக்கொண்டுள்ளன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO), சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்துதலை அறிவுறுத்தியிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.