அத்திப்பழம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிடைக்கும் ஒரு சீசன் பழமாகும்.இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்காவிட்டாலும், அதன் உலர்ந்த வடிவம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எந்த வடிவத்தில் இவற்றை உட்கொண்டாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அத்திப்பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதுவும் கடுமையான மலச்சிக்கலில் அவதிப்படும் போது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவி புரிவதோடு, இதயத்தில் கொடுக்கப்படும் அழுத்தமும் குறையும். இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இதய பிரச்சனை வரக்கூடாதெனில், அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்.
உலர்ந்த அத்திப்பழம் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இதை 2-3 துண்டுகள் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக உண்ணும் உணவுகளின் அளவு குறைந்து, உடல் எடை குறையும்.
தற்போது இரத்த அழுத்த பிரச்சனையை நிறைய பேர் கொண்டுள்ளனர். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது நாளடைவில் மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த பொட்டாசியம் அத்திப்பழத்தில் உள்ளன. எனவே அத்திப்பழத்தை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
அத்திப்பழத்தில் ப்ரீபயோடிக்குகள் அதிகமாக உள்ளன. ப்ரீபயோடிக்குகள் புரோபயோடிக்குகளின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்து, செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் அத்திப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற உதவிபுரியும்.
பண்டைய கிரேக்க காலத்திலிருந்தே அத்திப்பழங்கள், கருவுறுதலின் அடையாளமாக கருதப்பட்டது. அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து பெண்களின் முழு அண்டவிடுப்பின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உட்கொள்ளும் போது கருவளம் மேம்படும். அதுவும் ஆண்கள் அத்திப்பழத்தை சாப்பிடும் போது, அவர்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் மேம்பட்டு, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.