சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான டிங் லிரெங்கைகை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார்.