கபில் தேவின் மகத்தான சாதனை.. ஆஸ்திரேலிய மண்ணில் முறியடித்து வரலாறு படைத்த பும்ரா..
Tamil Minutes December 18, 2024 04:48 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கப்பா மைதானத்தில் மோதி வந்த 3 வது டெஸ்ட் போட்டி தற்போது டிராவில் முடிந்துள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கி இருந்தாலும் அடுத்து நடந்த டெஸ்டில் அவர்கள் பரிதாபமாக தோல்வியை சந்தித்திருந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா மட்டுமே கைகொடுக்க, பேட்டிங் எதுவும் சுத்தமாக எடுபடவில்லை.

இதனைத் தொடர்ந்து கப்பா மைதானத்தில் 3 வது டெஸ்ட்டிற்காக இந்திய அணி காலடி எடுத்து வைத்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதுடன் தோல்வியை தவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதும் முக்கியமாக பார்க்கப்பட்டிருந்தது.

தனியாளாக போராடிய பும்ரா

மேலும், கப்பா டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டால் தொடரை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பும் மங்கத் தொடங்கி விடும். இதற்கு மத்தியில், ஆஸ்திரேலிய அணியை 3 வது டெஸ்டில் எதிர்கொண்டிருந்தது இந்திய அணி. இதில் ஸ்மித் மற்றும் ஹெட் சதத்தால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுக்க, பந்து வீச்சில் பும்ரா மட்டும் தான் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் கோட்டை விட்ட இந்திய அணி, 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. ராகுல் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடக்க, கடைசி கட்டத்தில் பும்ரா – ஆகாஷ் தீப் பார்ட்னர்ஷிப்பும் பலமானதாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 2 வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணியை சிராஜ், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் என மூவரும் இணைந்து ஆட்டம் காண வைத்திருந்தனர்.

வரலாறு படைத்த பும்ரா

இதனால், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் சேர்ந்திருந்த ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ய, இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆடிய அவர்கள், விக்கெட் எதுவும் இழக்காமல் 8 ரன்கள் மட்டுமே எடுக்க மழை குறுக்கிட்டது. மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் போட்டியும் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இனி மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டாலே பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில், முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுக்கள் எடுத்திருந்த பும்ரா, 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆஸ்திரேலிய மண்ணில் புதிய வரலாற்றையும் எழுதி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக கபில் தேவ் (51 விக்கெட்டுகள்) இருந்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் வசம் இருந்த சாதனையை முறியடித்த பும்ரா, கபில் தேவைத் தாண்டி 52 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய மண்ணில் எடுத்து வரலாறு படைத்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.