#BIG NEWS : கேரம் உலக சாம்பியன் காசிமாக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு - தமிழ்நாடு அரசு..!
Newstm Tamil December 18, 2024 05:48 PM

அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா.

அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி, மித்ராவும் தங்கம், வெள்ளி வென்று பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், எளிய பின்னணியைக் கொண்ட கேரம் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு, இதுவரை எந்த நிதியுதவியையும் அறிவிக்கவில்லை என சர்ச்சை ஆகியிருக்கிறது. 

காசிமா அப்பா மேஹ்பூப் பாஷா பேசியது வைரலானது. அதாவது குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். எங்களோட இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்த மாதிரி விளையாட்டு வீரர்களை அரசு பாராட்டி, ஊக்கப்படுத்துறது வரவேற்கவேண்டிய விஷயம். அப்போதான், இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவாங்க. அதேநேரம், செஸ் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துல கொஞ்சமாவது அரசு, கேரம் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுத்திருக்கணும். தமிழ்நாட்டிலிருந்து கேரம் உலகப்போட்டிக்கு காசிமா, மித்ரா, நாகஜோதின்னு மூணு வீராங்கனைகள் பயிற்சியாளர் மரிய இருதயம் என 4 பேர் அமெரிக்காவுக்குப் போனாங்க.

போக்குவரத்து செலவுவுக்கு தலா, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்-னு 6 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அனுப்பிவைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர்களும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை வீணடிக்காத அளவுக்கு ஜெயிச்சுட்டு வந்தாங்க. குறிப்பா, என் பொண்ணு காசிமா தனிநபர், இரட்டையர், குழு போட்டின்னு மூன்று பிரிவுகளிலும் மூன்று தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடிச்சது. போக்குவரத்துக் கட்டணத்தை அரசு கொடுத்து ஊக்கப்படுத்தியில்லைன்னா, அமெரிக்கா போறது சிரமமாகியிருக்கும். அரசு நம்பிக்கையை எங்கப் பிள்ளைங்க காப்பாத்திட்டாங்க. ஆனா, குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவிச்ச மாதிரி, உலகக்கோப்பையை வென்றதுக்கும் அரசு பரிசுத்தொகையை அறிவிச்சிருக்கணும். இதுவரைக்கும் அறிவிக்காததுல எங்களுக்கு வருத்தம்.

நான், ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர். அதுவும் சொந்த ஆட்டோ இல்ல, வாடகை ஆட்டோதான் ஓட்டுறேன். வீடுகூட வாடகை வீடுதான். காசிமாவுக்கு கேரம்ல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சபிறகு, அவளுக்கு கேரம் சொல்லிக்கொடுத்துக் கிட்டிருக்கேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு என்னோட சொந்த செலவுலதான் கலந்துக்க வெச்சிருக்கேன் என வருத்தமாக பேசினார்.

இந்நிலையில், கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.