இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலித்துக் கொண்டே இருந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் குறுகிய வீரர்களே சர்வதேச அரங்கில் சிறந்த ஜாம்பவான்களாக விளங்கி வந்தனர். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், லட்சுமிபதி பாலாஜி என தமிழக கிரிக்கெட் வீரர்கள் பல எதிரணிகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வந்த நிலையில் அதில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் அஸ்வின் செய்த சம்பவங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு.
யாரும் நெருங்க முடியாத சாதனை
ஒரு காலத்தில் இந்திய அணி கண்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் யார் என கேட்டால் உடனடியாக அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் பெயரை கூறிவிடுவார்கள். ஆனால் தற்போது அவர்களை மிஞ்சும் அளவுக்கு அஸ்வின் டெஸ்ட் அரங்கில் சாதனைகளை படைத்து வந்த நிலையில், தமிழகத்தில் இருந்து வந்து இந்திய அணியில் பெரிய உயரம் தொட்டவரும் அவர் தான். அந்த அளவுக்கு அஸ்வின் பலரால் தொட முடியாத முக்கியமான சாதனைகளை சர்வதேச அரங்கில் தொட்டுள்ளார். அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்டுகளை தொட்ட இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் தக்க வைத்து வருகிறார்.
அணில் கும்ப்ளே, முரளிதரன், வார்னே உள்ளிட்ட சுழற்பந்து ஜாம்பவான்களின் சாதனைகளையும் டெஸ்ட் அரங்கில் நொறுக்கி விடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் தான் திடீரென ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தனது ஓய்வு முடிவையும் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இன்னும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அவர் தொடர்ந்து ஆடியிருக்கலாம் என்பதும் ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் ஐபிஎல், டிஎன்பிஎல், ரஞ்சித் தொடர் உள்ளிட்டவற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக கவனத்தை செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தின் மைந்தன் அஸ்வின்
அது மட்டுமில்லாமல் உள்ளூர் தொடர்களில் ஆடி முடித்த பின்னர் பயிற்சியாளராகவோ அல்லது கிரிக்கெட் அணிகளின் ஆலோசகராகவோ இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அஸ்வினிடம் உள்ளது. ஸ்மித் உள்ளிட்ட பல நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த அஸ்வினை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் அஸ்வின் கடைசியாக செய்த சில சம்பவங்களுடன் அமைந்திருந்த ஒற்றுமை என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். டெஸ்ட் அரங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் எடுத்தது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான். இதே போல கடைசியாக அவர் ஆட்ட நாயகன் விருது வென்றதும், அதே போல கடைசியாக தனது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்ததும் இதே சேப்பாக்கம் மைதானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி டெஸ்ட் அரங்கில் கடைசியாக அஸ்வின் செய்த பல விஷயங்களுடன் சேப்பாக்கம் மைதானம் தொடர்பு கொண்டிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.