ஓட்ஸ் சாப்பிட்ட பிறகு மலச்சிக்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் ஓட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்துமா?
செரிமானத்தில் நார்ச்சத்தின் பங்கு:
ஓட்ஸில் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. முக்கியமாக இது பீட்டா-குளுக்கன் வடிவத்தில் உள்ளது. இது மலத்தை அதிகப்படுத்துவதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் குடல் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து, ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் போதுமான நீர்ச்சத்துடன் சமநிலைப்படுத்தப்படாவிட்டால் தற்காலிகமாக மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
தண்ணீர் பற்றாக்குறை:
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி குடல் வழியாக எளிதாகச் செல்ல உதவுகிறது. ஆனால் போதுமான தண்ணீர் குடிக்கவில்லையென்றால், இந்தச் செயல்முறை மாறி, மலத்தை கடினமாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்தும். திடீரென அதிக நார்ச்சத்துள்ள உணவுக்கு மாறுவது, அதிலும் குறிப்பாக ஓட்ஸை முக்கிய உணவாகக் சாப்பிடுவது, செரிமான மண்டலத்தைத் திணறடிக்கும். இத்தகைய திடீர் மாற்றம் தற்காலிகமாகக் குடல் பழக்கத்தைச் சீர்குலைத்து வீக்கம் அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
கரையாத நார்ச்சத்து இல்லாமை:
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருந்தாலும், கரையாத நார்ச்சத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இது முக்கியமானது. ஏனெனில் இது மலத்தை செரிமான பாதை வழியாக விரைவாகச் செல்ல ஊக்குவிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ்:
இன்ஸ்டண்ட் ஓட்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ் தயாரிப்புகள், முழு அல்லது ஸ்டீல்-கட் ஓட்ஸ்களோடு ஒப்பிடும்போது குறைவான நார்ச்சத்து கொண்டதாக இருக்கலாம். மேலும், பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ் தயாரிப்புகளில், உணர்திறன் உள்ள நபர்களின் செரிமானத்தை பாதிக்கும் சேர்க்கைகள், செயற்கை இனிப்புகள் இருக்கலாம்.
செரிமான நிலைமைகள்:
மற்றவர்களுக்கு, இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அல்லது ஓட்ஸில் உள்ள சில சேர்மங்களின் உணர்திறன் காரணமாக மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். பதப்படுத்தும்போது ஓட்ஸ் பசையம் கலந்திருந்தால் செரிமான கோளாறுகளை அனுபவிக்க நேரிடலாம்.
நிறைய திரவங்களைக் குடிக்கவும்:
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து திறம்பட செயல்பட நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொண்ட பிறகு தினசரி குறைந்தது 8-10 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.
நார்ச்சத்து உட்கொள்ளலை படிப்படியாக அதிகரிக்கவும்:
உங்கள் செரிமான அமைப்புக்கு ஏற்பப் படிப்படியாக ஓட்ஸை உங்கள் டயட்டில் அறிமுகப்படுத்துங்கள். சீரான நார்ச்சத்து கிடைக்க, பிற நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவும்.
குறைவான பதப்படுத்தப்பட்ட ஓட்ஸைத் தேர்ந்தெடுக்கவும்:
ஸ்டீல்-கட் அல்லது ரோல்டு ஓட்ஸ் போன்ற முழு தானிய வகைகளைத் தேர்வு செய்யவும். இவை இன்ஸ்டண்ட் ஓட்ஸுடன் ஒப்பிடும்போது அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளை தக்கவைத்துக்கொள்கின்றன.
கரையாத நார்ச்சத்து சேர்க்கவும்:
சீரான குடல் இயக்கத்திற்காக, பழங்கள், காய்கறிகள் அல்லது நட்ஸ்கள் போன்ற கரையாத நார்ச்சத்து கொண்ட உணவுகளுடன் உங்கள் ஓட்ஸ் அடிப்படையிலான உணவை அதிகரிக்கவும்.
உங்கள் உடலில் கவனம் செலுத்துங்கள்:
உங்கள் உடல் ஓட்ஸுக்கு எதிர்வினையாற்றுவதைக் கவனியுங்கள். மலச்சிக்கல் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
ஓட்ஸ் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நேரடி காரணமாக இல்லை என்றாலும், போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாதது, திடீர் உணவு மாற்றங்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் செரிமான பிரச்சனைகள் போன்ற காரணிகள் இது போன்ற அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். ஓட்ஸை கவனமாக உட்கொள்வதன் மூலமும், சீரான உணவைப் பராமரிப்பதன் மூலமும், செரிமானக் கோளாறுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஓட்ஸின் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.