நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தற்போது அம்பேத்கர் என்று கூறுவது பேஷன் ஆகிவிட்டது எனவும், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் எனவும் அமித்ஷா கூறினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியது. அதன்பிறகு நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் அம்பேத்கர் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் அம்பேத்கரை தங்களுடைய கட்சியின் கொள்கை தலைவராக அறிவித்துள்ளார். அவர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.