அங்கே இருந்திருந்தால் அவரை நான் இப்படி செல்ல விட்டிருக்க மாட்டேன் - கபில்தேவ்..!
Newstm Tamil December 21, 2024 01:48 AM

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் 2010, ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டும், 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 டி20 போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் நடந்த பல டெஸ்ட் தொடர்களில் அணிக்குத் தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அஸ்வினுக்கு வழியனுப்பும் போட்டியை நடத்தி மரியாதையுடன் விடைபெற வழி வகுத்திருப்பேன் எனக் கபில்தேவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாகச் சமீபத்திய பேட்டியில் கபில் தேவ் பேசியது,

இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருடைய முகத்தில் வலியைப் பார்த்தது சோகம்.

சச்சின் டெண்டுல்கர் அல்லது சுனில் கவாஸ்கரின் தரத்திற்கு நெருக்கமாக ஒருவர் வருவாரென நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை. அப்படிப்பட்ட அஸ்வின் இங்கிருந்து சென்றுள்ளார்.

நான் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன். அங்கே இருந்திருந்தால் அவரை நான் இப்படி செல்ல விட்டிருக்க மாட்டேன். அவரை நான் நிறைய மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் அனுப்பியிருப்பேன். அதற்கு அவர் தகுதியானவர். அவருடைய மிகப்பெரிய பங்களிப்பை யாரும் நிரப்ப முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.