தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெறும் நடிகர்களின் இடத்தை நிச்சயம் நிரப்ப முடியாது. உதாரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஸ்டைல், கமல்ஹாசனின் புதுமையான முயற்சி உள்ளிட்ட அம்சங்களுடன் ஒரு நடிகர் இனி உயர்வதற்கு நிச்சயம் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி 40 முதல் 50 ஆண்டுகளாக திரைத்துறையில் தனித்து விளங்குவதற்கு அவர்களது திறமை காரணமாக இருக்கும் நிலையில் மறைந்த நடிகர் ரகுவரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். ஒரு காலத்தில் வில்லனாக பார்ப்பதற்கே மிரட்டலான வகையில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த ரகுவரன் அப்படியே நேர்மாறாக பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி இருந்தார்.
மிரட்டலான வில்லன்
இந்த இரண்டுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத அளவுக்கு வித்தியாசத்தை உணர்த்தும் ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பை பார்க்கும் போது நமக்கே ஒருவித பயம். மேலும் வீட்டில் இருக்கும்போது கூட தான் அந்த சமயத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தை ஒன்றியே இருப்பதாகவும் அவரது முன்னாள் மனைவி ரோகிணி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அளவிற்கு நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ரகுவரன் உடல்நிலை சரியில்லாமல் 49 வயதிலேயே மறைந்தார். தனக்கு எதிரே எப்படிப்பட்ட பெரிய நடிகர்கள் இருந்தாலும் அதை எதையும் மனதில் கொள்ளாமல் அசாத்தியமாக நடிப்பில் அசத்தும் ரகுவரன் ஒரே ஒரு வசனத்தை பேசி நடிக்க சற்று அதிருப்தி அடைந்தது பற்றி பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு வசனத்துக்கே டென்சன் ஆயிட்டாரு..
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணி புரிந்துள்ளவர் தான் கே.எஸ். ரவிக்குமார். இவரது முதல் திரைப்படமான புரியாத புதிர் படத்தில் ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் வரும் ஒரு காட்சியில், ‘I Know’ என்ற வசனத்தை தொடர்ச்சியாக பலமுறை ரகுவரன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
இது பற்றி பேசிய கே.எஸ். ரவிக்குமார், “I Know என்ற வசனத்தை பலமுறை வித்தியாசமான உடல் மொழியில் சொல்ல வேண்டுமென ரகுவரனிடம் கூறினேன். நான் காட்சியை எப்போதும் நடித்து காட்டி விடுவேன் என்பதால் 66 முறை அதனை வித்தியாசமான பாவனைகளில் நடித்து காட்டினேன். அதனை ரகுவரன் நடித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தொடர்ந்து சொல்ல முடியாமல் கட் என விரக்தியில் கூறி விட்டார்.
அப்போது சிகரெட்டை கீழே ரகுவரன் போட, அந்த காட்சியிலேயே ரகுவரன் சத்தமாக ‘I know’ என கூறுவதை டப்பிங்கில் சரி செய்து விட்டேன். ரகுவரன் சொன்னது 34 முறை தான். ஆனால் அவரது உடல் மொழிக்கு அந்த காட்சி எங்கேயோ சென்று விட்டது” என கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். இன்றளவிலும் ரகுவரன் நடித்த காட்சிகளில் I Know என்ற வசனம் பேசும் சீன் ரசிகர்கள் மனதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.