REWIND 2024 | பிரேம்ஜி முதல் கீர்த்தி சுரேஷ் வரை... லிஸ்ட் பெருசு... 2024ல் திருமணமாகி, புத்தாண்டை ஜோடியாய் வரவேற்கும் பிரபலங்கள்!
Dinamaalai December 21, 2024 02:48 PM

வரவிருக்கும் புத்தாண்டு பலருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத  புது வருஷமாக இருக்கப் போகிறது. நிறைவடைய இருக்கும் 2024ல் திருமணமாகி, புது வருஷத்தை இந்த முறை ஜோடியாக பல பிரபலங்கள் வரவேற்க தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல நாடுகளிலும், சுற்றுலா தலங்களிலும் இப்போதே சொகுசு ஹோட்டல்களை முன்பதிவு செய்து தங்களின் நியூ இயர் கொண்டாட்டாங்களை திட்டமிட்டு வருகின்றனர். அது சரி... கொண்டாட்டங்கள் தானே வாழ்க்கை. 2024ல் திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள்  யார் யார் என்று பார்க்கலாம் வாங்க. லிஸ்ட் கொஞ்சம் பெருசா தான் நீள்கிறது. 

ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கிக்கும் பிப்ரவரி 21ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.தமிழ்ப் படமான `ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கான `கட்புட்லி'யை ஜாக்கி தயாரித்தார். இதில் கதாநாயகியாக ரகுல் நடித்துள்ளார். பின்னர் உருவான நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ரகுல் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. ஜாக்கி தமிழ் படத்திலும் நடித்துள்ளார் என்பது தெரியுமா? திரிஷா நடித்த மோகினி படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக ஜாக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி - மேத்தயஸ்

டாப்சி - மேத்தயஸ் திருமணம் மார்ச் 23 அன்று உதய்பூரில் நடந்தது. பாட்மிண்டன் வீரரான மேத்தயஸ் உடன் டாப்சி 1 வருட உறவிலும் 10 வருடங்களாக காதலிலும் இருந்து வருகிறார். உண்மையில், டாப்சியின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டப்பூர்வமாக நடந்து முடிந்தது. பின்னர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மட்டும் அழைத்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

பிரேம் ஜி - இந்து

பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்பது பல வருடங்களாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இதற்கு அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர், வெங்கட்பிரபு, கங்கை அமரன், யுவன் உள்ளிட்ட பலரும் பதில் சொல்லி அலுத்துவிட்டனர். இந்தக் கேள்விக்கு 2024 ஆம் ஆண்டு பதில் கிடைத்தது. பிரேம் ஜி - இந்து திருமணம் ஜூன் 9 அன்று திருத்தணியில் நடந்தது. மூன்று வருட நட்பு காதலாகி பிறகு பின்னர் குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

ஐஸ்வர்யா - உமாபதி

ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் ஜூன் 10ஆம் தேதி சென்னை அர்ஜூன் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலில் நடந்தது. ஐஸ்வர்யா - உமாபதியின் ஒரு வருட நட்பு காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால்

சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமணம் மும்பையில் உள்ள சோனாக்ஷி வீட்டில் ஜூன் 23ஆம் தேதி நடந்தது. நடிகர் ஜாகீர் இக்பால் மற்றும் சோனாக்ஷி இருவரும் 2017 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர்.இவர்கள் `டபுள் எக்ஸ்' படத்தில் இணைந்து நடித்தனர். திருமணத்திற்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்ட சூழலில், திருமணத்திற்கு முன் ஜூன் 20-ம் தேதி வீட்டு விருந்து, ஜூன் 21-ம் தேதி மெஹந்தி பார்ட்டி என நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

வரலக்ஷ்மி - நிகோலாய்

வரலக்ஷ்மி - நிகோலாய் திருமணம் ஜூலை 2-ம் தேதி தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் மிக நெருங்கிய நட்புறவில் நடந்தது. திருமணத்தில் வெகு சிலரே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததால் ஜூன் 30ம் தேதி தனியார் ஓட்டலில் மெஹந்தி விழா நடந்தது.அதில் வரலட்சுமியின் அப்பா சரத்குமார் அப்படி போடு பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் வைரலாக பரவியது. நிகோலாய் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட். கடந்த 2010ம் ஆண்டு முதல் நல்ல நட்பாக பழகி வந்த வரலட்சுமியும், நிகோலயும் படிப்படியாக காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.

சிபி சக்கரவர்த்தி, வர்ஷினி

டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, வர்ஷினி திருமணம் ஈரோட்டில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்றது.இதில் திரையுலக பிரபலங்கள் பலர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றது.மேகா - விஷ்ணு இடையேயான பல வருட நட்பும், ஆறு வருட காதலும் திருமணத்தில் இணைந்துள்ளது.

சித்தார்த் -  அதிதி ராவ்

தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகசுவாமி கோவிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி திருமணம் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. ``மகா சமுத்திரம்'' படத்தில் இணைந்து நடித்த சித்தார்த்தும் அதிதியும் அதன் பிறகு சில வருடங்கள் காதலித்து வந்தனர். நெருங்கிய வட்டத்துடன் ஒரு சிறிய திருமணத்திற்குப் பிறகு, பெரிய நட்பு வட்டத்துடன் ராஜஸ்தானில் இரண்டு முறை பிரம்மாண்டமான திருமண விழாவை நடத்தியுள்ளனர்.

ரம்யா பாண்டியன் - லொவல் தவான்

நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் லொவல் தவான் திருமணம் நவம்பர் 8ஆம் தேதி ரிஷிகேஷில் நடைபெற்றது. பெங்களூரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் லோவெல் தவானை கடந்த ஆண்டு யோகா பயிற்சி மையத்தில் சந்தித்த ரம்யா பாண்டியன் இருவரும் நண்பர்களாகி பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆகாஷ் பாஸ்கரன் - தாரணி

தனுஷின் ``இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் - தாரணி திருமணம் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடந்தது. ஆகாஷ் சினிமாவில் பலருடன் நட்பாக இருப்பதால் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த திருமணத்திற்கு திரண்டனர்.

நாக சைதன்யா - ஷோபிதா

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நாக சைதன்யா தனது உணவகத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் இடுகையிட  , அதை பற்றி பேச  ஷோபிதா  தொடங்கினார். அந்த உரையாடல் நட்பாக மாறியது, பின்னர் சைதன்யா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பறந்து வந்து காதலை வளர்த்தார். அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி

நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் டிசம்பர் 8ஆம் தேதி குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. தாரிணி ஒரு பிரபலமான மாடல் ஆவார், அவர் 2019 இல் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அவர் மிஸ் யுனிவர்ஸ் 2021 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இருவரும் 2019 முதல் நண்பர்களாகி, பின்னர் அது காதலாக மாறியது. கடந்த ஆண்டு நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்தனர்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் ஆண்டனி தட்டிலும் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.சிறுவயதில் இருந்தே நண்பர்களாகவும், பல ஆண்டுகளாக காதலர்களாகவும் இருந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட அவர்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.