தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் தி.மு.க-வினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான் இதில் தி.மு.க தனது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து பாவங்களை சேர்த்துக் கொண்டது. அதோடு கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தினரின் பாவத்தையும் இந்த கட்சி சேர்த்துள்ளது.
வேங்கை வயலில் மனிதக் கழிவு கலந்த தண்ணீரை ஊர் மக்கள் குடித்து இன்னலுக்கு ஆளான நிலையில் இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் அந்த ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக் கொண்டதும் இந்த கட்சிதான். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அம்பேத்கர் பற்றி தி.மு.க பேசுவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமல்லாது சென்னையில் ரூபாய் 4000 கோடியில் மழை நீர் வடிகால்கள் அமைத்து விட்டோம் என்று கூறிக் கொள்ளும் அக்கட்சி மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களையும் வாங்கிக் கொண்டது. அதோடு ஊழல் செய்வதையே குடும்ப தொழிலாக்கி ஏழை எளிய மக்களின் பாவங்களை சேர்த்துள்ளது. மேலும் நிர்வாக திறனற்ற தி.மு.க-வை 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதை தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.