Yashasvi Jaiswal: யார் இந்த 3rd அம்பயர் ஷர்புத்தூலா சைகாட்... விவாதம் கிளப்பிய ஜெய்ஸ்வால் விக்கெட்!
Vikatan December 31, 2024 12:48 AM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 340 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஒருபக்கம் ரோஹித், கோலி, ராகுல், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேற, ஓப்பனிங் வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் ஒற்றை ஆளாகப் போராடிக் கொண்டிருந்தார்.

Jaiswal

200 பந்துகளுக்கு மேல் நின்று 84 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால், கம்மின்ஸ் வீசிய இன்னிங்ஸின் 71-வது ஓவரில் 5 வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் அவுட்டானார். முதலில் கள நடுவர் அவுட் தராததால், கம்மின்ஸ் மூன்றாவது நடுவரிடம் ரிவியூவுக்குச் சென்றார். அப்போது, பந்து பேட் அல்லது கிளவுஸில் பட்டிருக்கிறதா என்பதை மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகாட் (Sharfuddoula Saikat) ஸ்நிக்கோ மீட்டரில் ஆராய்ந்தார்.

IND vs AUS BGT 2025

அதில், பந்து பேட்டிலோ அல்லது கிளவுஸிலோ உரசியதற்கான எந்த அதிர்வும் ஸ்நிக்கோ மீட்டரில் தெரியவில்லை. இருப்பினும், பந்து லைன் ட்ராக்கிங்கில் அது தனது பாதையிலிருந்து விலகிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் அவுட் கொடுத்தார். இறுதியில், இந்திய அணி 155 ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இந்த நிலையில், ஜெய்ஸ்வால்விக்கெட் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மறுபக்கம், அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகாட் யார் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஷர்புத்தூலா சைகாட் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2000-02ல் டாக்கா மெட்ரோபோலிஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இருப்பினும் பெரிதாக சோபிக்காத காரணத்தால், நடுவராவதில் கவனம் செலுத்தினார்.

ஷர்புத்தூலா சைகாட்

அதைத்தொடர்ந்து, 2007-ல் உள்நாட்டு முதல்தர போட்டியில் நடுவராக அறிமுகமானார். பின்னர், ஜனவரி 2010-ல் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல்முறையாக சர்வதேச போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டார். அதையடுத்து, தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் நடுவராகச் செயல்பட்ட ஷர்புத்தூலா சைகாட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐ.சி.சி (ICC) நடுவர்களின் எலைட் குழுவில் சேர்க்கப்பட்டு, இந்தக் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் வங்கதேச நடுவர் என்ற சிறப்பையும் பெற்றார். இதுமட்டுமல்லாமல், வங்கதேசத்திலுள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் (Human resource management) எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.