"வெறும் விளம்பரத்திற்காக போராட்டம்"- பாமகவுக்கு ஐகோர்ட் குட்டு
Top Tamil News January 02, 2025 09:48 PM

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா ம க போராட்டத்திற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், இதை அரசியல் ஆக்குவது ஏன் என்றும் இது விளம்பரத்துக்காக நடத்தக்கூடிய போராட்டம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது..

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர்கோடத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே அதிமுக,, நாம் தமிழர் கட்சி,, பாஜக, மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக கட்சி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர்  அனுமதி மறுத்துவிட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மட்டும் வள்ளுவர்கோட்டம் பகுதியில் போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்க வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம்  விசாரணைக்கு எடுத்துள்ளது.காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல, வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆன் பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.