கடந்த பல தொடர்களாகவே இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வருபவர் தான் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெடஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் பும்ராவின் பந்து வீச்சு மட்டும்தான் மிகப்பெரிய ஆறுதலாகவும் இருந்து வருகிறது. அணியில் இருக்கும் 10 பேரும் சொதப்பினால் கூட தனியாளாக போட்டியின் முடிவையே மாற்றக்கூடிய திறனும் பும்ராவிடம் இருப்பதால் இன்னும் பல காலங்கள் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக அவர் இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
கடந்த டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரையிலும் பும்ராவின் தாக்கம் இந்திய அணியில் பெரிதாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுக்க இந்திய அணியின் பேட்டிங் பெரும்பாலும் சொதப்பி தான் வைத்திருந்தனர். ஆனாலும் பும்ராவின் பவுலிங் தரமாக இருந்து வருவதால் அந்த குறைகள் யாதும் தெரியாத அளவுக்கு ரசிகர்களும் அவரை பெரிதாக பாராட்டி வருகின்றனர்.
பும்ரா தி கோட்
அந்த வகையில் முதல் டெஸ்டில் பும்ராவின் தலைமையில் இந்திய அணி களமிறங்கி இருந்த போது பேட்டிங்கில் ரன் சேர்க்கவே தடுமாற்றம் கண்டது. ஆனாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து வெற்றியை பெற வைத்திருந்தார் பும்ரா. அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனாலும் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வருவது பும்ராவின் பந்துவீச்சு தான்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பும்ராவின் பந்தில் பவுண்டரிகள் அதிகம் விளாசினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு சிறிய அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார். அதுவும் கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் பேட்ஸ்மேன்களால் கூட பும்ராவை எதிர்கொள்வது பெரும்பாடாக இருந்து வருகிறது. இப்படி எங்கு பார்த்தாலும் பும்ரா பும்ரா என நிரம்பி இருக்கும் சூழலில் தான் சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளையும் அவர் தொட்டிருந்தார்.
டெஸ்ட் அரங்கில் முதல் பவுலர்
வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலர் என்ற பெருமையையும் சமீபத்தில் பும்ரா பெற்றிருந்த நிலையில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற முக்கியமான ஒரு மைல்கல்லும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளை 20 க்கும் கீழ் உள்ள பவுலிங் சராசரியில் பெற்ற முதல் பவுலராக மாறி அனைவரையுமே மிரண்டு பார்க்க வைத்துள்ளார் பும்ரா.
இதற்கு முன்பாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்ஷல் 20.94 என்ற சராசரியில் 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை டெஸ்டில் வீழ்த்தி இருந்தார். அதனை தற்போது கடந்ததுடன் மட்டுமில்லாமல் ஒரு புதிய வரலாறையும் பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.