ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த உடை மாற்றும் அறைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கடந்த 29 ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கட்டிடத் தொழிலாளியாகக் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி மாலை அச்சுந்தன்வயல் கிராமத்தை அடுத்துள்ள புத்தேந்தலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
கேமரா வைக்கப்பட்டிருந்த உடை மாற்றும் அறைஅப்போது அப்பெண்ணுக்கு இயற்கை உபாதை எழவே அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கியுள்ளார். அந்நேரத்தில் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த 4 பேர் அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் அப்பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகாரளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸார், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...