மது குடிப்பவர்களுக்கு புற்றுநோய் வருவது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்று அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி எச்சரித்துள்ளார். மது குடிப்பவர்களுக்கு குடல், ஈரல், மார்பகம் உள்ளிட்ட 7 வகையான புற்றுநோய்களை உருவாக்கும் என்று கூறியுள்ள விவேக் மூர்த்தி.மது பாட்டில்களில் இந்த எச்சரிக்கை அச்சடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
புகைப்பிடிப்பது புற்றுநோய் உருவாக்கும் என்ற எச்சரிக்கை போல் மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள மது அளவையும் மறு ஆய்வு செய்து புற்று நோய் தடுப்பதற்கான மது அருந்தும் அளவுகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மது உற்பத்தியாளர்களுக்கு அவர் இது குறித்தான அறிக்கையை அனுப்பியுள்ளார்.
புதிதாக பதவியேற்க உள்ள அதிபர் ட்ரம்ப் மது அருந்துவதில்லை. அவருடைய சகோதரர் மது போதைக்கு அடிமையாக உயிரிழந்தவர் என்பதால் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் ட்ரம்ப். புதிதாக பொறுப்பேற்க உள்ள சுகாதாரத் துறை செயலாளர் ராபர்ட் கென்னடி ஹெராயின் மற்றும் மதுவுக்கு அடிமையாக இருந்து மீண்டவர் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டவர். மது பாட்டில்களில் புற்றுநோய் எச்சரிக்கையை அச்சடிக்க ட்ரம்பும், ராபர்ட் கென்னடியும் ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இது குறித்து அமெரிக்க பாராளுமன்றம் தான் சட்டம் இயற்றி முடிவு செய்ய முடியும்.
அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் மதுவினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்குள்ள மதுவில் ஆல்ஹஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட ஒன்றிய அரசும் விழித்துக் கொள்ளுமா? உரிய நடவடிக்கைகள் எடுக்குமா? என்ற கேள்விகளும் எழுகிறது.