கூட்டுறவு வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி... வங்கி ஊழியர் கைது!
Dinamaalai January 04, 2025 03:48 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு நகர வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.18 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்த அதே வங்கியின் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான கணபதி மகன் தங்கவேல் (44), அவரது உறவினர்களான கிருஷ்ணமூர்த்தி மகன் மகேந்திரன் (36) மற்றும் கணபதி மகன் கிருஷ்ணமூர்த்தி (53) ஆகிய 3 பேரும் கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி அதில் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

மேற்படி பணத்தை வங்கிக்காக வசூலுக்கு வரும் வங்கியின் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த சென்னை, திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் பிரேம்குமார் (36) என்பவரிடம் கொடுத்து வங்கிக்கான நோட்டில் வரவு வைத்து வந்துள்ளார்கள். மேற்படி தங்கவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களது வங்கி கணக்கில் இதுவரை தலா ரூபாய் 7,71,000/- பணத்தையும் மேற்படி மகேந்திரன் ரூ7,79,000/- ரூபாய் பணத்தையும் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்கள். 

ஆனால் மேற்படி கூட்டுறவு வங்கியில் மேற்படி 3 பேருக்கும் தலா ரூபாய் 1,70,,000/- பணம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேற்படி கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த தேவராஜ் என்பவர் ரூபாய் 3,76,000/- பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணக்கில் ரூபாய் 500/- மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இதுபோன்று பாதிக்கப்பட்டு பணத்தை இழந்துள்ளனர்.

இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மேற்படி தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மகேந்திரன் ஆகிய 3 பேரும் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப் பிரிவு - II போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு - II காவல் துணை கண்காணிப்பாளர் சிவராஜ் பிள்ளை மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் சார்பு ஆய்வாளர் காமராஜ், தலைமை காவலர் கோதண்டராமன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த மேற்படி பிரேம்குமார் மற்றும் ஒருவரும் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் பிரேம்குமாரை நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வைத்து கைது செய்து நிலையம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு - II போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.