இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!
Webdunia Tamil January 01, 2025 08:48 PM


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், சென்னை வந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம், இலங்கை அதிபர் அனுரா திசநாயக்கா இந்தியா வந்தபோது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இலங்கை அரசு 20 இந்திய மீனவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்களுக்கு அங்கு தற்காலிக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு, கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இன்று, அவர்கள் சென்னைக்கு வந்த போது, மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, சொந்த ஊருக்கு தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

தற்போது, இலங்கையில் இன்னும் 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கும் நிலையில், அவர்களையும் விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.