கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 30 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை நம்ம யாத்திரி செயலி மூலம் ஒரு ஆட்டோவை புக் செய்துள்ளார். அது இரவு நேரம். அந்தப் பெண் கோரமா பகுதியில் இருந்து தனிச்சந்திரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டுனர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு செல்லும் பாதையில் செல்லாமல் வேறு ஒரு பாதையில் சென்றுள்ளார். அந்தப் பெண் வேறுபாதையில் எதற்காக செல்கிறீர்கள் என்று அந்த ஓட்டுனரிடம் பலமுறை கேட்டும் அவர் கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த ஓட்டுனரின் கண்கள் சிவந்திருந்ததை பெண் கவனித்தார். அதோடு அவர் மது போதையிலும் இருந்துள்ளார். அந்த ஓட்டுநர் ஒரு மேம்பாலத்தில் திருப்பியபோது பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.
அவர் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்டும் அவர் நிறுத்தாததால் வேறு வழி இன்றி மானத்தை காக்க அந்த பெண் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஆட்டோவில் இருந்து குதித்து விட்டார். அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து குதித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். பின்னர் அந்த ஓட்டுனர் அந்த பெண்ணிடம் ஆட்டோவில் வந்து ஏறுமாறு கூறிய நிலையில் அந்த பெண் மறுத்து வேறொரு ஆட்டோவில் சென்றுள்ளார். இதனை அந்த பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த கணவன் இரவு 9:00 மணிக்கு என் மனைவிக்கு இப்படி நடந்த நிலையில் இது போன்று இன்னும் எத்தனை பெண்களுக்கு நடக்கும் என்று பெங்களூரு போலீசாரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.