Ooty Frost: அவலாஞ்சியில் மைனஸ் டிகிரிக்கு கீழ் சரிந்த வெப்பநிலை... ஊட்டியை நடுங்க வைக்கும் உறைபனி!
Vikatan January 06, 2025 03:48 PM

கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஊட்டியில் பனிக்காலங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி நிலவும்.

அவலாஞ்சி உறைபனி

வெப்பநிலை மிகவும் குறைந்து, பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டும் என்பதால் கடுமையான குளிர் நிலவும். புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக நடப்பு ஆண்டு ஊட்டியில் உறைபனி மிகவும் தாமதமாகவே துவங்கியிருக்கிறது. தாமதம் என்றாலும் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறான குளிர் நடுங்கச் செய்வதால் மாலை, காலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. ஊட்டி, தலைக்குந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் புல்வெளிகள், விளை நிலங்கள் என காலையில் பார்க்கும் இடமெல்லாம் வெண் கம்பளம் விரித்தார் போல உறைபனி கொட்டிக் கிடக்கின்றன.

அவலாஞ்சி

அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸிற்கு கீழ் சரிந்திருக்கிறது. வெம்மை ஆடைகளை அணிந்தும் தீ மூட்டியும் கடுமையான உறைபனி குளிரில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து வருகின்றனர். நள்ளிரவில் கேரட் அறுவடையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் உறைபனியின் தாகத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.