நட்டாவை சந்திக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.. தமிழக பாஜக தலைவர் பதவியா?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி சென்று இருப்பதாகவும், அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் பாஜக தலைவர் பதவி மாற்றப்பட இருக்கிறது. இதற்காக மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , தேசிய தலைவர் நட்டாவை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் "இன்னும் பத்து நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்," என்று தெரிவித்தார். மேலும், "தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்திக்கும்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து பேச உள்ளேன்," என்றும் அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழிசை சவுந்தரராஜன் புதிய பாஜக தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
Edited by Mahendran