பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன் செல்போனில் பேசியவர் யார் என்ற உண்மையை மறைக்க முயல்கிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசியவிட்டு, குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவுக்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு.
திமுக அரசின் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில் முழு உண்மையும் வெளிக்கொணர வலியுறுத்தியும், தமிழக பாஜக மகளிரணி சார்பில் இன்று (ஜன.3) மதுரையில் தொடங்கி சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதிகேட்புப் பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி ராஜன் கூறும்போது, "தமிழகத்தில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்காக குரல் கொடுத்துப் போராடினால், அனுமதி மறுக்கப்படுகிறது. பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் என்பதைவிட, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் பேரணி நடத்த இருக்கிறோம். ஆனால், அதற்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது. எனவே, மகளிரணி அணி சார்பில் ஜன. 3-ம் தேதி (இன்று) கண்ணகி நீதி கேட்ட மதுரையில் இருந்து, சென்னையை நோக்கி பேரணி நடத்த இருக்கிறோம். தமிழக அரசு அடக்குமுறையைக் கையாண்டாலும், கைது செய்தாலும் எங்கள் பேரணி நிச்சயம் நடக்கும். பேரணி முடிவில், ஆளுநரிடம் மனு வழங்க இருக்கிறோம்" என்றார்.