ஏமன்: கேரள செவிலியருக்கு மரண தண்டனை; ஒப்புதல் அளித்த அதிபர்... காப்பாற்றப் போராடும் குடும்பத்தினர்!
Vikatan January 02, 2025 01:48 AM
கேரள செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனைக்கு ஏமன் அதிபர் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. ஏமன் தலைநகர் சனாவில் செவிலியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனாவில் கடந்த 2015-ல் கிளினிக் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். ஆனால் மஹ்தி மொத்த வருவாயையும் எடுத்துக் கொண்டு நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். மேலும் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

நிமிஷா ப்ரியா

இது தொடர்பான புகாரில் சனா போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற நிமிஷா முயன்றிருக்கிறார். ஆனால் இந்த முயற்சியில் ஓவர் டோஸ் காரணமாக மஹ்தி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பான வழக்கில் நிமிஷாவுக்கு ஏமன் நீதிமன்றம் கடந்த 2018-ல் மரண தண்டனை விதித்தது. அப்போது முதல் அவரது விடுதலைக்காக கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.

நிமிஷாவின் மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ல் நிராகரித்தது. பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் அவர்களின் பழங்குடியின தலைவரின் மன்னிப்பை பெறுவதே, நிமிஷா விடுதலையாவதற்கு ஒரே வாய்ப்பாக உள்ளது. இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி ஏமன் சென்றுள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மன்னிப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

representation image

இந்நிலையில் நிமிஷாவுக்கான மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறார். இது நிமிஷாவின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் நிமிஷா தூக்கில் இடப்படலாம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிமிஷாவைக் காப்பாற்ற இந்திய அரசு உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.