இஸ்ரோ நிறுவனம் அவ்வபோது புதிய ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. அதன்படி வருகிற 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷனை’ நிறுவ உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஸ்பேடெக்ஸ்’ என்ற திட்டம் உள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள விண்கலன்களை ஒருங்கிணைக்க உள்ளது. இதற்காக 2 விண்கலன்களை இஸ்ரோ தலா 220 கிலோ எடை கொண்டு வடிவமைத்துள்ளது. இதை இரண்டையும் சுமந்து கொண்டு BSLV C-60 என்ற ராக்கெட் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு, 2 விண்கலங்களும் சுமார் 470 கி.மீ தொலைவுக்கு அனுப்பப்பட்டது. இது வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நடைபெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் சாதனையை படைத்த 4-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும். இந்நிலையில் இஸ்ரோவின் இந்த செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்து சென்ற போது நட்சத்திரங்களை துரத்தி செல்வது போல காட்சி அளித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.