சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் நிதிஷ் (15), திவாஷ் (14). இருவரும் புத்தாண்டை கொண்டாட செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்களும் புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) கடலில் குளிப்பதற்காக நகர் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பெரும் அலையில் சிக்கி இருவரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்த கல்பாக்கம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் காணாமல் போன சிறுவர்களை தேடி வந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.