தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் அரபு மொழி பேராசிரியராக பணிபுரிந்து வந்த மயிலாடுதுறையை சேர்ந்த 43 வயது ஜியாவுதீன், கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்திருந்தார்.
மேலும் இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர் மீது மாணவி புகார் அளித்திருந்த நிலையில், ஜியாவுதீன் மட்டும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், நான் புகார் அளித்த ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஒருவர் மீது மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐந்து பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் பணபலம் மிக்கவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டி கழிக்கின்றனர். தற்போது இந்த ஐந்து பேரும் வெளியே இருந்து கொண்டு, நான் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனது வீட்டிற்கு பத்து, 15 அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்த அனைத்து சிசிடிவி காட்சி ஆதாரங்களும் இருக்கிறது. தற்போது என்னை கல்லூரிகளில் இருந்து டிஸ்மிஸ் (நிரந்தரமாக நீக்கம்) செய்து கடிதம் அனுப்பி உள்ளனர். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று மாணவி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.