விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சேமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி முருகன் மகன் முத்துக்குமரன் (27). செப்.,19ல் காணாமல் போனார்.முருகன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முத்துக்குமரனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசனிடம் (26) அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை பிடித்து விசாரித்ததில் முத்துக்குமரனை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தமிழரசன் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது, நான்கு மாதங்களுக்கு முன் முருகன் தனது விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த மரத்தூளை விற்பனை செய்ததில் இருந்து ரூ.10 லட்சம் ரூபாய் அவரது மகன் முத்துக்குமரனின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் வங்கியில் பணம் எடுக்க தெரியாததால் நண்பர் தமிழரசனை அழைத்து முத்துக்குமரன் வங்கிக்கு சென்றார். அப்போது தமிழரசன் அவரை ஏமாற்றி காசோலையில் கையெழுத்து வாங்கி அவரது வங்கி கணக்கில் பணத்தை மாற்றியுள்ளார். ஆனால் 4 மாதங்களாக பணத்தை முத்துக்குமரனிடம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வங்கியில் பணம் எடுக்க தமிழரசனுக்கு முருகன் போன் செய்துள்ளார்.
அப்போது, வங்கியில் நெட் பிரச்னை இருப்பதாகவும், சந்தேகம் இருந்தால் விக்கிரவாண்டியில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்துக்குச் சென்று விசாரிக்கலாம் என்றும் கூறி முத்துக்குமரனை தனியாக அழைத்துச் சென்றார் தமிழரசன். ஆனால் அவர் பணத்தை தரவில்லை. பின்னர், வீட்டுக்குச் செல்லும் வழியில் சேமங்கலம் மலட்டாறு பகுதி அருகே உள்ள தனது நிலத்துக்கு முத்துக்குமரனை அழைத்துச் சென்ற தமிழரசன், முத்துக்குமரன் பணத்தை திரும்ப கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தமிழரசன் முத்துக்குமரனை பிடித்து பைக்கில் தள்ளிவிட்டு தாக்கினார். முத்துக்குமரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின், இரும்பு கம்பியால் தலையில் பலமுறை தாக்கியதில் முத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் முத்துக்குமரனின் உடலை நிலத்தின் அருகே உள்ள மலட்டாறு வாய்க்கால் கரையோரம் புதைத்துவிட்டு, செல்போனை அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டுக்குச் சென்றார். தற்போது செல்போன் உரையாடல் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் டிஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா, திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், தாலுகா அதிகாரி செந்தில்குமார், தடயவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று முத்துக்குமரன் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை பொக்லைன் மூலம் தோண்டினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின் போது சடலம் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மலட்டாற்றின் கரையோரம் வேறு எங்காவது கரை ஒதுங்கியுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. அடுத்த 2 மாதங்களில், அதாவது கடந்த நவம்பர் மாதம் தமிழரசனுக்கு திருமணம் நடந்தது. ஆனால் முத்துக்குமரனை ஏமாற்றிய பணத்தை புதுமணமகன் தமிழரசன் என்ன செய்தார்? திருமணச் செலவுக்குப் பயன்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்காவது கொடுத்தாரா? விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலையில் உடலை அடக்கம் செய்ய தமிழரசனின் நண்பர்கள் யாராவது உதவியிருக்கிறார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.