இன்று அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்க... இவர்களுக்கு இலவச பயணம்!
Dinamaalai January 05, 2025 12:48 PM

இன்று ஜனவரி 5ம் தேதி சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்பவர்களுக்கு இலவச பயணத்தையும் அறிவித்துள்ளன. 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாரத்தான் ஓட்டம் 5.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ப்ரெஷ் வொர்க்ஸ் மாரத்தானுடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரயில் சேவைகள் ஜனவரி 5ம் தேதி அன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி ஜனவரி 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.

வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று ஒரு நாள் மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.