சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். இந்தப் பேட்டியில் சந்திரசேகரிடம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எதிர் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த சந்திரசேகர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நல்ல விஷயத்திற்கு நல்லவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகள் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருவதை எதிர்த்து கவர்னர் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை மனுவை விஜய் அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சந்திரசேகர், விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவையெல்லாம் நிச்சயம் செய்துதானே ஆக வேண்டும் என பதிலளித்தார்.