நாளை இறுதி வாக்காளர் பட்டியல்... உங்க பேர் லிஸ்ட்ல இருக்கா செக் பண்ணிக்கோங்க !
Dinamaalai January 05, 2025 02:48 PM


 
தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்  முழுவதும்  23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதன்   மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதி திங்கட்கிழமை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உட்பட  பணிகளை மேற்கொண்டனர். அதன் பிறகு, அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28ம் தேதி வரை பெறப்பட்டது.
 
இக்காலகட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 4 நாட்கள் முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1,19,701 மற்றும் திருத்தம் மேற்கொள்ள 4,42,111 என 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  


அந்த வகையில் சிறப்பு முகாம்கள் மற்றும் நேரில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 901 விண்ணப்பங்களும்,  ஆன்லைன் மூலம்  5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப்பங்களும்  பெறப்பட்டன. இதில், பெயர் சேர்க்க மட்டும், ஆன்லைனில் 1,08,872, நேரடியாக 9,22,372 விண்ணப்பங்கள், பெயர் நீக்க ஆன்லைனில் 2,69,200, நேரடியாக 2,81,915 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய ஆன்லைனில் 1,60,372, நேரடியாக 5,66,605 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  
இந்த விண்ணப்பங்களின் மீதான பரிசீலனை 2024 நவம்பர் 29 முதல்  டிசம்பர் 24 வரை பரிசீலிக்கப்பட்டது.  இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி நாளை தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சென்னை மாநகராட்சி ஆணையர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார். அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.