இந்நிலையில், நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து நாளை காலை 9 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.20 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ரவியை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் செல்கிறார்.
பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசித்து முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து முடிப்பார்.அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஜனவரி 7ம் தேதி சட்டப்பேரவை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதன் பிறகு 2லிருந்து 3 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதமும், பதிலுரையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.