இந்தியா தோத்தத விடுங்க.. ஐந்தே வருடங்களில் முதல் இந்திய வீரராக பும்ரா செஞ்ச சரித்திர சாதனை
Tamil Minutes January 06, 2025 03:48 AM

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இழக்காமல் தக்க வைத்துக் கொண்டே வந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர், இரண்டு நாடுகளிலும் வைத்து நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி தான் தொடர்ந்து கைப்பற்றி வந்தது.

அதிலும் இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சரித்திரம் எழுதி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அந்த நம்பிக்கையில் இந்த முறையும் ஆஸ்திரேலிய மண்ணிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி.

மோசமான தோல்வி

ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர்களை வீழ்த்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் பேட்டிங்கில் செய்த நிறைய சொதப்பல்களால் இந்திய அணி படுமோசமாக தோல்வி அடைய பும்ரா மட்டும் தொடர்ந்து பந்து வீச்சில் கலக்கிக் கொண்டே இருந்தார். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் எந்த விதத்திலும் இந்திய அணி வெற்றி பெற உதவாமல் போக, தொடர் தோல்விகளையும் அவர்கள் சந்தித்திருந்தனர்.

இதே போல, கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் ஜொலிக்கத் தவறிய ரோஹித் ஷர்மா, தாமாக முன் வந்து கடைசி டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்தே விலகி இருந்தார். ஆனாலும் அந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வழக்கம் போல சொதப்பியதால் எளிய இலக்கை மட்டுமே நிர்ணயிக்க, ஆஸ்திரேலிய அணி அதனை எளிதாக எட்டிப்பிடிக்க இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தொடரையும் இழந்திருந்தது.

சரித்திர சாதனை செய்த பும்ரா

தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணி, இந்த முறை அதனை மோசமாக இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பையும் தவற விட்டது. இந்திய அணி 10 ஆண்டுகள் கழித்து இரண்டு டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக தோல்வி அடைந்து பல முக்கியமான சாதனைகளையும் தவறவிட்டு வருகிறது.

இப்படி இந்திய அணிக்கே இது சோதனை காலமாக இருந்தாலும் பும்ரா என்ற ஒருவரை ஊரே கொண்டாடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த பும்ரா, அவரது அர்பணிப்பின் காரணமாக பாராட்டுக்கள் பெற்றும் வருகிறார். இதனிடையே தான் முதல் இந்திய வீரராக சேனா நாடுகளில் பும்ரா படைத்துள்ள சாதனையை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணிலும், 2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலும், தற்போது ஆஸ்திரேலிய மண்ணிலும் என 3 முறை தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளார் பும்ரா. இதன் மூலம் 3 சேனா நாடுகளில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பும் பும்ராவுக்கு தற்போது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.