நடிச்சா ஹீரோதான் பாஸ்.. இனிமே அப்படி நடிக்க மாட்டேன்.. படவிழாவில் ஓப்பனாகப் பேசிய கலையரசன்..
Tamil Minutes January 07, 2025 06:48 PM

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நடிகராகத் திகழ்பவர் நடிகர் கலையரசன். கடந்த 2010-ல் வெளியான அர்ஜுனனின் காதலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, முகமூடி ஆகிய படங்களில் நடித்தார்.

பா. ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டகத்தி படத்தில் தினேஷின் அண்ணானாக நடித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் அன்புவாக கார்த்தியின் நண்பனாக வந்து கவனம் ஈர்த்தார்.

மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக தொடர்ந்து பா.ரஞ்சித்தின் கபாலி, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்தார் கலையரசன். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது மீண்டும் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கலையரசன்.

ஆனால் இப்படத்தில் ஹீரோ ஷான் நிகாம். ஹீரோயினாக நிகாரியா நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்கம் வாலி மோகன் தாஸ். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய கலையரசன், “ பெரும்பாலும் நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரங்கள் இறந்து போவது போன்றே வைத்துள்ளனர். என்னை மனதில் வைத்தே கதை எழுதுவார்கள் போல.

இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே துணை கதாபாத்திரங்களில் நடிப்பேன். இல்லையென்றால் முதன்மைக் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிப்பேன்” என்று கலையரசன் அந்நிகழ்ச்சியில் பேசினார். மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.