பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்த பொருட்களை அந்த நாட்டு தலைவர்களுக்கு பரிசாக கொடுப்பது வழக்கம்.
பிரதமர் மோடி 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு வைரம் பரிசாக அளித்து இருந்தார். அப்போது இது பெரிதாக பேசப்படவில்லை. அந்த வைரத்தின் மதிப்பு 20,000 டாலர். 2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களை அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் சந்தித்தனர்.
2023-ல் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி 20,000 டாலர் மதிப்பிலான வைரம் பரிசாக வழங்கி இருந்தார். அதாவது, ஜில் பைடனுக்கு அந்த ஆண்டில் வேறு எந்த நாட்டின் உலகத் தலைவர்களும் வழங்கிய பரிசை விட இந்தப் பரிசின் மதிப்பு அதிகம் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 7.5 காரட் வைரத்தை ஜில் பைடனுக்கு பரிசாக மோடி வழங்கி இருந்தார். இதன் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 17 லட்சமாகும். இத்துடன், 6,232 டாலர் மதிப்பிலான செதுக்கப்பட்ட சந்தனப்பெட்டி, "பத்து முக்கிய உபநிடதங்கள்" புத்தகங்கள், ஒரு சிலை மற்றும் விளக்கு ஒன்று ஆகியவற்றை பரிசளித்து இருந்தார்.
தேசிய ஆவணக்காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகத்திற்கு (NARA) ஜனாதிபதி பைடனின் பரிசுகள் மாற்றப்பட்ட நிலையில், ஜில் பைடனுக்கு பரிசாக வழங்கப்பட்ட வைரம் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக தக்க வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட வருடாந்திர கணக்கில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த வைரம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் இயற்கையான வைரங்கள் உருவாகும் அதே செயல்முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்த வைரம் பிரதமரால் பரிசாக அளிக்கப்பட்டது. இது பசுமை ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தியா பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது என்பதைக் காட்டும் வகையில் இந்த வைரம் பரிசாக வழங்கப்பட்டது என்பது கூடுதல் செய்தியாகும்.
முன்னதாக நவம்பர் 2022-ல், பைடனுக்கு 1,000 டாலர் மதிப்பிலான ஓவியத்தை மோடி பரிசளித்து இருந்தார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பதிவுகள் காட்டுகின்றன. ஜில் பைடனுக்கு ஜூலை 2023-ல் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா இரண்டாவது விலையுயர்ந்த பரிசாக 14,063 டாலர் மதிப்பிலான எக்கினால் ஆன மலர் ப்ரூச் பரிசாக அளித்து இருந்தார்.
தென் கொரியாவில் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் சுக் யோல் யூன் 7,100 டாலர் மதிப்பிலான நினைவு புகைப்பட ஆல்பத்தை ஜில் பைடனுக்கு வழங்கி இருந்தார். இது மூன்றாவது விலை உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.