தேசிய கீதம் அவமதிப்பு? ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையிலிருந்து வெளியேறிய கவர்னர்!
Tamil Minutes January 06, 2025 05:48 PM

பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் முதல் ஆளாக வருகை புரிந்தனர். பின்னர் வழக்கமாக ஆளுநர் உரை வாசிக்கப்படும்.

எனவே ஆளுநர் உரையை வாசிப்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தை போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் அண்ணா பல்கலை. விவகாரம் குறித்து ஆளுநர் தலையிடக் கோரி கோஷம் எழுப்பினார். மேலும் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் யார் அந்த சார் பதாகைகளை ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்புகளைக் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை இசைக்கக் கூறினார். ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படாததால் உடனே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்தள செய்தியில், தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, கவர்னர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார்.

கடந்த ஆண்டும் இதே போன்று ஆளுநர் தனது உரையை முழுவதும் வாசிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.