ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக போராடி இருந்தார்.
ஆனால் அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து பந்து வீச செய்ததால் கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதுகு வலியால் பாதிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகினார். இதற்கு அணி நிர்வாகம் எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் கரும்பிலிருந்து சாற்றி பிழிவது போன்று பும்ராவை இந்த தொடரில் பிழிந்து விட்டார்கள். டிராவிஸ் ஹெட், சுமித் என யார் வந்தாலும் பும்ரா தான் பந்து வீச வேண்டும். எவ்வளவு ஓவர்கள் தான் அவர் வீசுவார். இதனால் கடைசி போட்டியில் அவரால் பவுலிங் கூட செய்ய முடியவில்லை.
அவர் விளையாடி இருந்தால் ஆஸ்திரேலியா அணி சற்று சிரமப்பட்டு தான் வெற்றி வாகை சூடி இருக்கும். ஆனால் பும்ராவின் இடுப்பை நீங்கள் உடைத்து விட்டீர்கள். அணி நிர்வாகம் தான் ஒருவர் எத்தனை ஓவர் வீச வேண்டும் என்பதை முடிவெடுக்கும்.
சிட்னி மைதானத்திற்கு எதற்காக இரண்டு ஸ்பின்னர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. பிட்சை பார்த்து அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கூடவா தெரியாமல் போய்விட்டது” என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.