Canada: ``கனடாவின் அடுத்தப் பிரதமர்?" - ரேஸில் முன்னணியில் இருக்கும் அனிதா ஆனந்த்! - யார் இவர்?
Vikatan January 08, 2025 10:48 PM

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தப் பிரதமர் யார் என்றக் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் முதன்மையான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

அனிதா ஆனந்த்

கனடாவின் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பதவியில் இருக்கும் அனிதா ஆனந்த், முதன்முதலில் 2019-ல் Oakville நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2019 - 2021 வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராகப் பணியாற்றினார். கருவூல வாரியத்தின் தலைவராகவும், தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கொரோனா-19 தொற்று உச்சத்தின் போது, கனேடியர்களுக்கான தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், விரைவான சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை, ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தினார்.

அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய போது, ராணுவத்தில் பாலியல் முறைகேடுகளுக்கு தீர்வு காண சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ராணுவ சேவை செய்யும் அனைவரின் நலனுக்காகவும், கனேடிய ஆயுதப் படைகளில் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தினார். உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக, உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும், விரிவான இராணுவ உதவிகளை வழங்குவதற்கான கனடாவின் முயற்சிகளுக்கும் இவர்தான் தலைமை தாங்கினார். கடந்த செப்டம்பர் 2024-ல் கூடுதல் பதவியாக போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.